Tuesday, September 05, 2006

மகிந்த இராசபக்சேயை அய்யன்னா எப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போகிறது?

லெபனன் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தரை, கடல், வான் தாக்குதல் மூலம் லெபனனின் கட்டுமானம் முற்றாக நிர்மூலமாகியது.

வீடுவாசல்கள், தொடர்மாடிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பாலங்கள், சாலைகள் எல்லாம் கண்மூடித்தனமான வான் தாக்குதலுக்கு இலக்காகியது.
நிலத்தடி சுரங்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நாஸ்ரல்லா (Seik Hassan Nasrallah) பதுங்கி இருக்கக் கூடும் என ஊகிக்கப்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கொத்தணி குண்டுகளை (Cluster bombs) வீசியது. அமெரிக்க தயாரிப்பான இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் 50-100 கிலோ எடை கொண்டது. நீளம் 1.42 அடி. உயரம் 1.75 அடி. அகலம் 1.75 அடி. நிலத்துக்கு மேலே 10,000 மீட்டர் உயரத்தில் விமானத்தில் இருந்து போடும் போது 50 மீட்டர் உயரத்தில் வெடித்து 200 - 600 கும் அதிகமான குட்டிக் குண்டுகளாகப் பறக்கின்றன. குட்டிக் குண்டுகள் பார்ப்பதற்கு கொக்கோ கோலா தகரடப்பாக்கள் போல இருக்கும்.

அமெரிக்காவும் சர்ச்சைக்குரிய இவ் வகையான குண்டுகளை இராக், ஆப்கனிஸ்தான், சேர்பியா போன்ற நாடுகளில் பயன்படுத்தியது. இராக்கில் மட்டும் 13,000 கொத்தணிக் குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதிலிருந்து வெடித்துச் சிதறிய குட்டிக் குண்டுகளின் எண்ணிக்கை 1.9 மில்லியன் (19 இலக்கம்) ஆகும்!

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை யூலை 12 தொடங்கி யுத்த நிறுத்தம் ஏற்பட்ட ஆகஸ்ட் 14 வரை (34 நாள்கள்) லெபனன் மீது 7,000 வான்படைத் தாக்குதலையும் 2,500 கடற்படைத் தாக்குதலையும் நடத்தியதாக அறிவித்தது.
யூனிசெப் 1,183 லிபனன் குடிமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டது. இதில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் ஆவர். தகர்க்கப்பட்ட குடிமனைகள் 15,000 எனவும் இடம்பெயர்ந்த மக்கள் தொகை 970,000 எனவும் அது அறிவித்துள்ளது.
இஸ்ரேல் லெபனன் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை, அளவுக்கு மீறிய தாக்குதலை அமெரிக்காவும் பிரித்தானியாவும் தற்பாதுபாப்புத் தாக்குதல் என நியாயப்படுத்தியன. கனடிய பிரதமர் ஸ்டீபன் கார்ப்பர் "அளவான பதிலடி" (Measured response) என வருணித்தார். அய்ரோப்பிய ஒன்றியம், உருசியா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இஸ்ரேல் நடாத்திய தாக்குதலைக் கண்டிக்க மறுத்தன. அல்லது மறந்தன.

ஒரு நாடு இன்னொரு இறைமை படைத்த நாட்டின் மீது இப்படியான கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தலாமா? போர் பற்றிய பன்னாட்டு சட்ட திட்டங்களின் கீழ் இந்தத் தாக்குதல் போர்க் குற்றங்கள் (War criminals) உசiஅநள) ஆகாதா? என நீங்கள் கேட்கக் கூடும்.

ஆம், இஸ்ரேல் லெபனன் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் போர்க் குற்றங்கள்தான் என அனைத்துலக மன்னிப்பு அவை அடித்துச் சொல்கிறது.
அனைத்துலக மன்னிப்பு அவை விடுத்துள்ள அறிக்கையில் லெபனன் நாட்டுக்கு எதிரான போரில் இஸ்ரேல் அந்த நாட்டுப் பொதுக் கட்டுமானத்தை (civilian infra-structure) வேண்டும் என்றே தாக்கியதாகவும் அந்தத் தாக்குதல்கள் பன்னாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணானவை எனவும் அவை போர்க் குற்றங்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துலக மன்னிப்பு அவை தனது அறிக்கையில் கைக்குக் கிடைத்த தொடக்க சான்றுகளைக் கொண்டும், தாக்குதலின் பரப்பு மற்றும் நோக்கம், உயிர் இழப்பு, உடமை இழப்பு மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளது கூற்றுக்கள் ஆகியவை வைத்து நோக்குமிடத்து குறிப்பிட்ட அழிவுகள் இராணுவ தந்திரோபாயத்தின் ஒரு கூறாகத் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என்றும் அவற்றை "சமாந்தர சேதம்" (collateral damage) எனச் சொல்ல முடியாதென்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான சண்டையைத் தொடக்க முதல் கண்காணித்த மன்னிப்பு அவை பொதுமக்கள் மீது நேரடியான தாக்குதல்கள் மற்றும் கண்மூடித்தனமான, அளவுக்கு மீறிய தாக்குதல்கள் மூலம் பன்னாட்டு சட்ட திட்டங்களை மீறியுள்ளது (Israel violated international laws banning direct attacks on civilians and barring indiscriminate and disproportionate attacks) எனச் சொல்கிறது.

அனைத்துலக மன்னிப்பு அவை இஸ்ரேல் லெபனன் மீது மேற்கொண்ட தாக்குதலின் போது பன்னாட்டு சட்டதிட்டங்களை மீறியுள்ளதா? இல்லையா? என்பதைப் பார்க்குமாறு அய்யன்னாவைக் கேட்டுள்ளது.

அனைத்துலக மன்னிப்பு அவை இஸ்ரேல் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளது என விடுத்துள்ள அறிக்கையைப் பாராட்டும் அதே வேளை அந்த அமைப்பு இலங்கையில் ஸ்ரீலங்கா அரசு இழைத்த, இழைக்கின்ற போர்க் குற்றங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? ஏன் மவுனம் சாதிக்கிறது? என்பது விளங்கவில்லை.

மனிதவுரிமை மீறல்களைக் கண்காணிக்கும் அனைத்துலக மன்னிப்பு அவை அநீதி எங்கே இழைக்கப்பட்டாலும், போர்க் குற்றங்கள் எங்கு இடம் பெற்றாலும் அவற்றைத் தட்டிக் கேட்க வேண்டும்.

லெபனன் மக்களுக்கு ஒரு நீதி தமிழீழ மக்களுக்கு இன்னொரு நீதி என அந்த அவை நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடந்தால் அதன் நம்பகத்தன்மை அல்லது நடுநிலைமை கேள்விக் குறியாகி விடும்.

மகிந்த இராசபக்சே ஸ்ரீலங்காவின் ஆட்சித்தலைவராக கடந்த நொவெம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்த பின்னர் சிங்களப் படையினர் தமிழ்ப் பெருநிலப் பரப்பைத் தாக்கி முற்றாக அழித்து வருகிறார்கள். அப்பாவி பொதுமக்களை இரக்கம் சிறிதுமின்றி கொன்று குவிக்கிறார்கள். பாலியல் வன்முறை, காணாமல் போவது, ஆள்க்; கடத்தல், கைது நாளும் பொழுதும் அதிகரித்தவண்ணம் உள்ளன.

மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் இனப் படுகொலைகள் தமிழர்கள் வாழும் வட - கிழக்கு நிலப்பரப்பில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அரங்கேறப்படுகின்றன.

தமிழீழத்தில் இருந்து 11,000 கும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு ஆபத்தான கடல் பயணத்தையும் பொருட்படுத்தாது ஏதிலிகளாக ஓடிப் போயிருக்கிறார்கள். 200,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள்.
வி.புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று ஏட்டளவிலேயே உள்ளது.

திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்திருப்பது அப்பட்டமான யுத்த மீறலாகும். அங்கு நடந்த சண்டையின் போது மேற்கொண்ட குண்டு வீச்சு எறிகணைத் தாக்குதலில் 100 கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள், 40,000 கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். சம்பூரும் அதனை அண்டியுள்ள ஊர்களும் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. மக்களது குடிமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுக் கட்டிடங்கள் ஒன்றுமே தப்பவில்லை.

ஸ்ரீலங்காவின் முப்படைகளின் முதன்மைத் தளபதி என்ற அடிப்படையில் ஆட்சித்தலைவர் மகிந்தா இராசபக்சே மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு ஹேக்கில் இயங்கும் அனைத்துலக நீதிமன்றத்தித்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் முல்லைத் தீவு மாவட்ட செஞ்சோலை வளாகத்தின் மீது 4 கிபீர் விமானங்கள் 16 குண்டுகளைப் போட்டதில் 51 மாணவிகளும் 4 ஊழியர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். 129 மாணவிகள் காயப்பட்டார்கள். பலர் கால் கைகளை இழந்தார்கள்.

இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்ட படுகொலை "காட்டுமிராண்டித்தனமான, நாகரிகம் மற்றும் மனிதாபிமானமற்ற வெறியாட்டம்" ("Atrocious, uncivilized and inhuman") என வருணிக்கப்பட்டது.

இந்தக் குண்டு வீச்சை ஸ்ரீலங்கா அரசு மறுக்கவில்லை. "குண்டு போட்ட இடம் வி.புலிகளின் பயிற்சிப் பாசறை, கொல்லப்பட்டவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த வி.புலிப் போராளிகள், வி.புலிப் போராளிகளை இலக்கு வைத்துக் கொல்லும் போது நாங்கள் பால் வயது போன்றவற்றைப் பார்ப்பதில்லை" எனப் பாதுகாப்புத் தொடர்பாக பேசக் கூடிய அமைச்சர் கேகலிய இரம்புக்வெல திமிரோடு பேசியிருந்தார்.

மூதூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் (16 தமிழர்கள், 1 முஸ்லிம்) ஆகஸ்ட் 3 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இப்படுகொலை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் படுகொலைக்குச் சிறிலங்கா இராணுவமே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது ஒரு படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் வருணித்துள்ளார்.

"இந்தச் சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

17 பணியாளர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணைகளைச் சிறிலங்கா அரச அதிகாரிகள் தடுக்க முனைந்தனர் என்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் அனைவருமே இராணுவத்தினர் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கண்காணிப்புக் குழு மேலும் தெரிவித்தது.

"போல்கன் நாடுகளில் இத்தகைய சம்பவங்களை சந்தித்த அனுபவம் உள்ளது" என்று இரு வாரங்களுக்கு முன்னதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறினார்.

"மூதூர் பிரதேசம் முழுமைக்கும் எம்மைப் பார்வையிட இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏன்? பாதுகாப்புக் காரணங்களா? இல்லை, வேறு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும்" என்றும் உல்ப் ஹென்றிக்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

போல்கன் நாடுகளில் இடம் பெற்ற போர்க் குற்றங்களுக்கு சேர்பியாவின் ஆட்சித் தலைவர் Slobodan Milosevic கைது செய்யப்பட்டு பன்னாட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.

ஆகஸ்ட் 20, 2006 – கத்தோலிக்க அடிகளார் ஜிம் பிரவுண் அவர்களும் அவரது உதவியாளர் 5 பிள்ளைகளது தந்தை விமலதாசும் அல்லைப்பிட்டியில் காணமால் போயுள்ளார்கள். அல்லைப்பிட்டி ஸ்ரீலங்கா அரசாங்கக் கட்;டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியைச் சேர்ந்த இடமாகும். அல்லைப்பிட்டி கடற்படை முகாமின் தளபதி நிஷாந்தா ஜிம் பிரவுண்; அடிகளார் கத்தோலிக்க தேவாலயத்தைச் சுற்றி வி. புலிகள் பதுங்கு குழிகள் வெட்ட ஒத்தாசை செய்தார் எனக் குற்றம் சாட்டியிருந்தார். அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 25 கும் அதிகமான பொதுமக்கள் சிங்கள இராணுவத்தின் ஆட்டிலறித் தாக்குதலில் கொல்லப் பட்டுள்ளார்கள். பிரேத விசாரணைக்கு அல்லைப்பிட்டிக்குச் சென்ற யாழ்ப்பாண நீதிபதி கடற்படையினரால் தடுக்கப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டார்.

யூன் 8, 2006 - மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் என்போர் மிகவும் குரூரமான முறையில் கடற்படையினரால் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட பின்னர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர். சின்னையா மூர்த்தி மாட்டின் (35) அந்தோனி மேரி மடலின் (27) ஆன் லக்ஷிகா (9) ஆன் டிலக்ஷன் (7) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர் ஆவர். இதில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் அண்மையில் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 13, 2006 - யாழ்ப்பாண மாவட்டம், மண்டதீவைச் சேர்ந்த 13 தமிழர்கள் கடற்படையினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுப்படையினராலும் (para militaries) கொலை செய்யப்பட்டார்கள். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், குழந்தை (4 அகவை) பிள்ளை (9 அகவை) அடங்குவர்.

மே 06, 2006 - யாழ்ப்பாண மாவட்டம், மந்துவில். கோயில் ஒன்றில் இரவு தங்கிய 8 தமிழர்கள் காணாமல் போனார்கள். இந்தக் கோயிலுக்கு அருகில் சிங்கள இராணுவ முகாம் இருக்கிறது. கோயிலைச் சுற்றி சப்பாத்துக் கால் அடையாளங்கள், குருதி காணப்பட்டது.

சனவரி 02, 2006 – திருகோணமலைக் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்த 5 அப்பாவித் தமிழ் இளைஞர்கள் எந்த முகாந்திரம் இல்லாது பாதுகாப்புப் படையினரால் மிக அண்மையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. ஒரு சில நிகழ்வுகளையே மேலே அட்டவணைப் படுத்தியுள்ளேன். இந்தக் கொலைகள் தொடர்பாக யாரையும் காவல்துறை இதுவரை கண்டு பிடிக்கவில்லை. கைது செய்யப்படவும் இல்லை.

போர்க் குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டில் ஆட்சித் தலைவர் மகிந்த இராசபக்சேயை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இவை போதுமானவை என நினைக்கிறேன்.

கேள்வி என்னவென்றால் அனைத்துலக மன்னிப்பு அவை ஸ்ரீலங்கா அரசு போர்க்குற்றங்கள் இழைத்துள்ளது என எப்போது அறிக்கை விடப் போகிறது? மகிந்த இராசபக்சேயை அய்யன்னா அவை எப்போது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போகிறது?